தமது மனைவியின் சொத்துக்கள் காரணமாக தாம் செல்வந்தராகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் குடும்பத்தினர் தம்மை விடவும் மிகவும் செல்வந்தர்கள் எனவும் அவர்கள் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புண்ணியம் செய்தமையினால் மனைவியின் ஊடாக அபிவிருத்தி அடைய கிட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக முறைப்பாடு செய்த மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமைச்சர்களின் சொத்துக்களுடனும் ஒப்பீடு செய்யும் போது இந்த விடயம் நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இரவு கூட்டங்களுக்கு செல்லும்போது ஊரில் உள்ளவர்கள் தமது சட்டை பைக்குள் 5000 ரூபாய் வழங்குவதாகவும் எரிபொருள் வழங்குவதாகவும் ஊடகங்களிடம் கூறிய நபர்கள் தம்மை விட சொத்துக்களை வைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமக்கு எதிராக குற்றம் சாட்டும் நபர்கள் தனது மனைவியின் சொத்துக்களையும் தமது சொத்துக்களையும் பிரித்தறிந்து கொள்ள முடியாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமக்கு இன்னமும் 39 வயது மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தமது பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்ற சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சொத்து விபரங்களில் உள்ளடக்கியுள்ளதாகவும் சட்ட விரோதமாக சொத்துக்களை கொள்வனவு செய்ததில்லை எனவும் மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட விடயங்களில் முதலீடு செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.